Friday, June 21, 2013

நீர், நெருப்பு, ஒரு தாயத்து!

நீர், நெருப்பு, ஒரு தாயத்து! உலகம் முழுதும் பல்வேறு சமுகம் மற்றும் சமயத்தார் காலம் காலமாய் தாயத்துகளை பயன் படுத்தி வருகின்றனர். சித்தர்களும் தங்களுக்கே உரிய தனித்துவமான முறையில் பல தாயத்துக்களை பழக்கத்தில் வைத்திருந்தனர். இவை பெரும்பாலும் தங்களின் சீடர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கப் பட்டவை. கொடிய வன விலங்குகள் அணுகாமல் இருக்கவும், உயிர் கொல்லும் விஷ ஜந்துக்களிடமிருந்து காப்பாற்றவும், மேலும் வைத்திய காரணங்களை முன்னிருத்திய மருத்துவ தாயத்துகளையும் உருவாக்கி பயன் படுத்தி வந்தனர். இவற்றை தயாரிக்கும் முறைகள் ரகசியமானவை. இதன் விவரங்களை தங்களின் பாடல்களில் சொல்லியிருக்கின்றனர். அந்த வகையில் கருவூரார் அருளிய "கருவூரார் வாதகாவியம்" என்ற நூலில் தாயத்து தயாரிக்கும் முறை ஒன்று காணக் கிடைக்கிறது. அந்தத் தகவலை இன்றைய பதிவில் காண்போம். அதிசயமாம் பச்சையேந்தி யிடக்கை அதினுடகாலும் அன்பாகச் சேர்த்து நிதிவெள்ளியான நிறைதாயத்தி ழடைத்துக் கெதிபெற வாயிற்கிடத்திநீ கேளே கீழே நிரிற்கிடந்து மிதக்கினும் கீழேவிரித்துக் கிடக்கினும் பயமில்லை நாளே தணலில்நடந்தால் சுடாது ஆளேகைக்கொள் அம்புவி தனிலே. - கருவூரார். பச்சோந்தி ஒன்றின் இடது கையினையும், இடது காலினையும் ஒன்றாக எடுத்து சாபநிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை வெள்ளியால் ஆன தாயத்து ஒன்றில் அடைத்து, அணிந்து கொள்ள வேண்டுமாம். இவ்வாறு அணிந்தவர் நீரில் கிடந்து மிதந்தாலும், நெருப்பின் மீது நடந்தாலும் எவ்வித துன்பமும் உண்டாகாது என்கிறார் கருவூரார். இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டது. எனவே இந்த பதிவை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே அணுகிட வேண்டுகிறேன்.